Tuesday, August 23, 2011

தொலைந்த நொடி

உனக்குள்ளே தொலைந்த நொடியும் 
உன்னை தொலைத்த நொடியும்
மறக்குமேயானால்

என் கவிதை கிறுக்கலே 
நான் எவ்வாறு வாழ்ந்திருப்பேன்?



அன்பு


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள் 
உண்டென்று கண்டேன் உன்னிடம்
எனக்காக நீ என்னை பிரிந்த நாட்களில்...



Friday, May 27, 2011

எனக்கானவன்

என்னை அழ வைப்பதும் நீதான்
என் அழுகையினிடையில் என் கண் துடைத்து
என்னை சந்தோஷ படுத்துவதும் நீதான் !

Monday, May 9, 2011

சொல்லு பொறுக்காம போனவனே


ஒத்த சொல்லு பொறுக்காம பொசுக்குனு போனவனே
பெத்த தாயி படும்பாட்ட கொஞ்சம் நீ கேக்கலயோ??

குனிஞ்சா நிமிந்தா உன் உசிரு போயிருமோன்னு 
அசையக் கூட பயந்து மெல்லமா நானசஞ்சேன் 

வித விதமான சோத்துக்காக நான் ஏங்கும் காலத்துல
பொறக்காத புள்ளைக்கு ஒத்துக்குமான்னு மருத்துவச்சி உசிரெடுப்பேன்

என் உடம்பு நோவ நீ வெளி வர துடிச்சப்போ
புள்ள நீ சுகமா இருக்க அய்யனார வேண்டிகிட்டேன்

உனக்கான பசி நேரத்துல என் மார நீ மிதிக்க 
பசி பொறுக்காத உன் குணத்த பாத்து உச்சி மொகந்துக்கிடேன்
என் பசி தூக்கம் பொறுத்துக்கிட்டேன்

காட்டு வேலைக்கி போன உங்கப்பன் 
போனவரு மொத்தமா போயே சேர
எம்புள்ள உனக்காக என் துக்கம் தாங்கிகிட்டேன்
எனக்குள்ள அடச்சுக்கிடேன்

வீட்டு வேல தவற வேறறியா என் கைய
மொறட்டு வேலைக்கும் பழகிகிட்டேன் 
எம்புள்ள எதிர்காலம் நினைச்சு என் மனச தேத்திக்கிட்டேன்

படிக்காத உங்கப்பன் ஆயி போல நீ இருக்க கூடாதின்னு
உசுர் நோவ பாடுபட்டு உன்ன பள்ளிக்கூடம் சேர்த்து விட்டேன்

இந்த ஊரு பள்ளிக்கூடம் நல்லா இல்லைன்னு நீ சொல்ல கேட்டு
கடன் வாங்கி டவுனுல சேத்து விட்டேன் 

படிச்சவன் நீ அங்கயே வேல பாக்க
எம்புள்ள ஒசந்துட்டானு சந்தோசமா சாமிக்கு பொங்கல் வெச்சேன்

உன் கலியாணத்த நடத்தி பாக்க ஊரு ஊரா
பொண்ணு தேடி நான் திரிஞ்சேன்
பெத்த புள்ள என் வாக்க தட்ட மாட்டான்னு
ஊருக்குள்ள உன்ன பத்தி பெருமையா பேசிகிட்டேன்

ஒரு டவுனு புள்ளைய கூட்டியாந்து
இவதான் என் பொண்டாட்டின்னு வந்து நின்ன
பெத்த பாசம் ஒரு பக்கம் அவமானம் ஒரு பக்கமினு
பொறுக்க முடியாம உன் தாயி செத்தா போயிட்டான்னு நானும் கேட்டேன்

ஒத்த சொல்லு பொறுக்காம  பொசுக்குனு போனவனே...

உன் தாயி நெசமாவே சாக போறேன்

உசிரு ஏங்கிகிட்டு துடிக்குதுன்னு
மருத்துவச்சி சொல்லிட்டு போறா
என் ஏக்கம் உனக்காகதான்னு புரியலையோ???

பெத்த ராசா கடசியா உன்ன பாக்க
உசிர கையில புடிச்சுகிட்டு நானிருக்கேன்
சிரமப் பட்டு என் சாவ தள்ளிக்கிட்டு இருக்கேன்

உனக்காக எவ்வளவோ செஞ்ச தாயி
கடசியா எனக்காக ஒன்னே ஒன்னு கேட்டுக்கறேன்

உன் கோபத்த மூட்ட கட்டி
என்ன ஒரு தடவ பாத்துட்டு போ
என் உசிர நிம்மதியா அனுப்பிட்டு போ!!!

Saturday, July 31, 2010

பெண்ணே

உன் மனம் பேசா வார்த்தைகளை
உன் மௌனம் உணர்த்தியது!

உனக்கும் எனக்குமான இடைவெளி
இனி எப்போதும் எல்லைக்குள்!

சபதமாய் நான் ஏற்கிறேன்
உன் கோப கனல்களை குளுமை
படுத்திவிடு என் பெண்ணே!!!

தனிமை

தனிமை...
அர்த்தம் புரிதலில் தவறுள்ளதோ?
தனிமை என்பது
                 தனித்து நிற்பதல்ல!
தனக்கு தானே துணையாகக் கொண்டு
தன்னை தானே நட்பு பாராட்டி
தனக்கு தானே உயிர்ப்பித்துக் கொள்ளும்
தன்னை தானே உய்வித்துக் கொள்ளும்
ஓர் உன்னத அனுபவம்!

தனக்கான தன்னாலான துணை
                              வெறுமையல்ல
இனிமை அது என்றென்றும்!!!

நிசப்தம்

மனம் பேசும் வார்த்தைகள்
எதிர் சுவற்றில் எதிரொலிக்கிறது!
கண் விழித்திருக்கும் போதும்
கற்பனைகள் கண் முன்னே ஓடி ஆடுகிறது!
தொலை தூர காலடி ஓசை
துல்லியமாய் காதில் விழுகிறது!

நிசப்தம்
எங்கும் நிசப்தம்!!!

நித்திரையும்... கனவுகளும்...

மறைவுகள் இன்றி வாழ்ந்த வாழ்க்கையில்
இன்று மறைவுகளே வாழ்க்கையாய்...
உண்மையின் நேர்காணல் எப்போது நேரும்?

கனவுகளில் வாழ்க்கை சந்தோஷங்களை கண்டு
கனவுகள் கலைந்தால்
விழித்துக் கொண்டதாய் அர்த்தம் கொண்டேன்
விடியல் கண்டதாய் அர்த்தம் கொண்டேன்

வாழ்க்கை என்னும் நிஜத்தில் பிரயாணப் படுவதாய்
                                                             பூரித்துப் போனேன்

நிஜத்தின் நிழலைக் கண்டே என் எதிர்கால நிகழ்வுகள்
                                         புரிந்ததாய் புரிந்து கொண்டேன்

நிஜத்தின் நிஜத்தைக் கண்ட பின்பே
கனவுகளின் உண்மை புரிந்தேன்

இன்றோ...
கனவுகளுக்கு ஏங்கி கண்களை கோர்க்கிறேன்

நித்திரையும் இல்லை
கனவுகளும் இல்லை!!!

Thursday, July 29, 2010

என் நண்பனின் சில வரிகள்...

நண்பா நீ கேட்டுக் கொண்டாய் என இதோ ஒரு சுய விளம்பரம் :)

பூர்ணி , இவள்
 
தனிமை விரும்பி
 
கேள்வியின் நாயகி
 
கனவுகளின் தோழி 
 
கற்பனையின் காதலி  
 
குமரியின் வடிவம்
 
குழந்தையின் உள்ளம்
 
அறிவில் கலைமகள் அம்சம்
 
கோபத்தில் காளியின் வம்சம்
 
ஆருயிர் தோழியாக  அன்னை
 
தங்கையின் உருவில் இன்னொரு அன்னை
 
உள்ளுக்குள் கண்ணீர் வடிப்பாள்
 
வெளியில் பொய்யாக சிரிப்பாள்
 
இது இவளுக்கு கை தேர்ந்த கலை 
 
யாரிடம் கற்றாள் இதை 
 
பெண்ணே இதுவும் ஒரு நாள் கடந்து போகும்
 
உன் வாழ்வில் மீண்டும் வசந்தம் வரும்
 
இப்படிக்கு,
 
 நீ வாழ வாழ்த்தும் ஓர் இதயம்

Friday, July 23, 2010

என்னை என்னுள்ளே செதுக்கியவர்கள்

என் கற்பனைக்கு தீனி போட்டவர்கள் 
என்னை என்னுளே அடையாளம் கண்டவர்கள்
என் நன்றி கடனாய்

என் மலரும் நினைவுகளாய்
இதோ உங்கள் முன் என் வரிகள்!

அப்பா
திருட்டுத்தனமாய் உங்கள் கவிதைகளை நேசித்திருகிறேன்
உங்கள் கனவுகளில் குடிபுகுந்துள்ளேன்
உங்கள் சிந்தனை சிறகுகளில் சிறிது இடம் எடுத்துக் கொண்டேன்!

என்னுடைய முதல் உந்துதல் தாம் தான்! 

உலகில் அவரவர்க்கு கவி எழுத தூண்டுதலாய்
ஆயிரமாயிரம் கவிஞர் இருப்பர்
எனக்கோ
எனக்கு இந்த உலகை அடையாளம் காட்டியவர்
என்னை எனக்கே அடையாளம் காட்டினார்!!!

உங்களை பற்றி அனைத்தும் அறிந்த நான்
நீங்கள் எழுத நிறுத்தியதன் காரணம் மட்டும் ஏனோ அறியேன்!

உமக்கே தெரியாமல் உம்மை என் ஆசானாய் ஏற்றுக் கொண்டேன்
உலகமறியா அவ்வயதில் புவியனைத்தும் தெரிந்து கொள்ள
என் முதல் திறவுகோல் உங்கள் கவிதை என்னும்
கிறுக்கல்கள் தான்!

கிறுக்கல்கள்...
இது சரியான வார்த்தையல்ல
அது
உனது வாழ்க்கை பிரயாணங்கள்!

நீர் வாழ்ந்த இளமை காலங்கள்
உமக்கு நினைவுள்ளதா நான் அறியேன்

நீர் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும்
நானும் வாழ பழகிக் கொண்டேன்
உமது கவிச் சிறகுகளில் பிரயாணப் பட்டு 
உமது வரிகளால் நானும் வானுலகில் மிதக்க கற்றுக் கொண்டேன்! 

உமக்கான ஒவ்வொரு ஆசையையும்
உமக்கான ஒவ்வொரு கனவையும்
எனதாக்கி கொண்டேன்!

உமது முடிவுற்ற எழுத்துக்களின் ஆரம்பமாய்
என்னை நினைத்து எழுதக் கற்றுக் கொண்டேன்!

நீர் முடிந்ததாய் என்னும் எழுத்துக்கள்
முடியாமல் என் மூலம் வலம் வந்து கொண்டிருக்கும்!!!
என் எழுத்துகளின் முடிவு
என் சந்ததியின் எழுத்துக்களின் ஆரம்பமாய் திகழும்!!! 

தோழா (2)

தாய்மை பெண்ணுக்கு சொந்தம் 
ஆயினும்
தாயாய் என்னை அரவனைக்கிறாய்!

உன் குரலின் இனிமையில் 
உலகையும் வென்றிடும் தெம்புண்டு எனக்கு
உன் வார்த்தையின் வெப்பத்தில்
கொடூரங்களை எதிர்கொள்ளும் துணிவுண்டு!

என்னுள் நேசமாய், நட்பாய் துளிர்விட்ட நீ
என்னுள் முழுமையாய்
உணர ஆரம்பிக்கும் முன் பிரிந்து செல்வாயோ???

தோழா

என் வாழ்க்கை நீ வாழ பழகி கொண்டாய்
உன் நடைமுறை நான் தெரிய விளக்கி சொன்னாய்

உன் அறிமுகத்தால்...
உன்னை நேசித்தேனா அறியவில்லை
என்னை நேசிக்க கற்றுக் கொண்டேன்!

என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
என்னை யாரென்று எனக்கே சொல்லி கொடுத்தாய்!
என்னிடம் நீ பேசிய தருணங்களை விட
எனக்காய் நீ வாதாடிய தருணங்கள் ஏராளம்!

நம் நட்பு 
முதலுமில்லாமல் முடிவுமில்லாமல் ...

உள்ளங்கள் புரிந்து கொள்ளும் இவ்வுறவிற்கு
உள் அர்த்தம் தேவையில்லை!

காலம் பாராமல் நாம் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகள்
நேரமரியாமல் நாம் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள்
ஓர் வாழ்க்கை பருவத்தில் அடங்கி விடாது!!!

Thursday, December 31, 2009

விடை தேடா வினாக்கள்

உலக நியதி

சூரியன் உதிப்பது கிழக்கில் எனில்
கிழக்கை நிர்ணயித்தது யாரோ???



வளர்ப்பு
பிறந்த குழந்தை
              வளர்கிறதா வளர்க்கப்படுகிறதா?
வளர்கிறது எனில்
              அதற்கு உலகம் புரிவது எதனால்?
வளர்க்கப்படுகிறது எனில்
              அதனுள் தோன்றும் தனித்துவம் யாரால்?

வளர்வது... வளர்க்கப்படுவது
இவை இரண்டும் சம கால நிகழ்வெனில்

அக் குழந்தையின்
எந்த குணம்
            வளர்வதால் உருவானது?
எந்த குணம்
           வளர்க்கப்படுவதால் உள்வாங்கப் படுகிறது???


கால மாற்றம்
அக்கால மனிதனின் தொலை நுண்ணர்வு
இக்கால கணினி வேலைப்பாடு ஆகுமெனில்
இக்கால மனிதனின் இயந்திரங்கள்
எதிர் காலத்தில் என்னாகுமோ?

அக்கால மனிதனின் படைப்புகள்
இக்காலத்தில் கற்பனைகள் எனப்படின்
இக்கால இயந்திர படைப்புகள்
எதிர்காலத்தில் எதுவாக எற்கப்படுமோ???

Friday, April 4, 2008

நான் நேசித்த கவிதை...

வாழ்கையின் யதார்த்ததை
என்னை யோசிக்க வைத்த
என் ரசனைக்கு உரிய
ஓர் படைப்பு
உங்கள் முன்னால்...

நிம்மதியின் சந்நிதி
--------------------------

சோகத்தின் சொந்தக்காரனே
கவலைகளின் கைதியே
ஏமாற்றங்களின் விலாசமே
இடிந்துகிடக்கும் இதயமே

முனுமுனுப்புக்களில்
மூச்சை கரைத்தது போதும்
என் சிந்தனை தேரில் வந்தமர்

ஓர் ஞான யாத்திரை நடத்தி பார்போம் !

உன் உயிர்
உன்னை கேட்டு உண்டானதில்லை
உன் உடல்
உன் உடன்பாட்டோடு உருவானதில்லை

உன்
அழகோ அழகின்மையோ
ஏழ்மையோ செல்வமோ

எதுவாயினும்
அவை பிறப்பால் திணிக்கப்பட்ட
இயற்கை பிடிவாதங்கள் !

வாழ்க்கை என்பது
செலவளித்தே தீர்க்க வேண்டிய செல்வம்
நொடி நொடியாக
பிறப்பிலிருந்து இறப்பை நோக்கி நகரும் பயணம்

இதில்
எல்லாமுள்ளவனும்
ஏதுமில்லாதவனும்
என்றுமே இருந்ததில்லை !

சதுரங்கத்தின் கருப்பு வெள்ளையாய்
இன்ப துன்பம் விரவி கிடக்கும்
வாழ்க்கை களத்தில்,

நீ
ஆட்டக்காய் என்கிறது இறையுணர்வு
ஆட்டக்காரன் என்கிறது பகுத்தறிவு

இதுவோ அதுவோ

இங்கே
கேட்டதெல்லாம் கிடைப்பதில்லை
கிடைத்ததெல்லாம் கேட்டதில்லை !!!

மன்னிலுறை தாவர சங்கமத்தில்
மகத்துவம் அதிகம் பெற்ற மனிதனே

எதிர்பார்ப்பு காற்றில்
இலவமாய் பறந்து
ஏமாந்து கணங்களில்
இரும்பாகி போக
எது காரணம்?

மனம்
மனம்
மனம் !!!

இங்கே
மனமிருக்கும் வரை
நினைவிருக்கும்
நினைவிருக்கும் வரை
கனவிருக்கும்
கனவிருக்கும் வரை
துயரிருக்கும்.

இப்பொல்லா மனதை
ஒதுக்கி வைத்து ஓட முடியாது

உன் இயக்கம்
முற்று புள்ளியை எட்டி விடுமுன்
உன் மயக்கம்
மறைந்து போக வேண்டாமா?

சஞ்சலிக்கும் மன பேயை
தேவனாக்கும் சாதனையே
சத்திய தரிசனம்
புறத்தே பார்த்து பார்த்து புலம்புகின்றவனே

நீ
அகத்தை பார்க்க ஆரம்பித்துவிடு !

சட்டையில்லா உடம்பின் மேல்
சாட்டையால் அடித்து கொண்டு
பிச்சை கேட்பவர் போல்

ஆசை என்னும் சாட்டையால்
ஆன்மாவை வதைத்து கொள்ளும்
அவலத்தை கொல்.

உள்ளத்தை களைத்த ஒருத்தி
உடன்பட்டு விட்டால்
இன்னொன்று ஈர்க்காமல் விட்டுவிடுமா?
கூடை கூடையாய்
ஆடைகள் குவிந்தாலும்
போதும் என்ற நிறைவு பூத்துவிடுமா?
வகை வகையாய்
வடித்து தின்றாலும்
சுவையுணர்ச்சி சுருங்கி போகுமா?

வீடு கிடைத்தால் ஊரின் மேலும்
ஊர் அமைந்தால் நகரின் மேலும்
நகர் எய்தினால் நாட்டின் மேலும்
பெருகி கொண்டே போகும்

ஆசைக்கு அளவென்பதில்லை!

தாய் பூச்சியை கொல்லும் வரை
கரையான் புற்று மறையாது
ஆசை பூச்சியை கொல்லும் வரை
சோக சுமைகள் குறையாது!


உடம்பை களைப்பாற்ற
உறங்குகின்ற மனிதனே
மனதை இளைப்பாற்ற
மறந்து விட்டதேன்?

பசுமையும் வரட்சியும்
மழையை சார்ந்தது
இன்பமும் துன்பமும்
மனதை சார்ந்தது!

அலைகின்ற மனது
தீப்புன்னாய் எரியும்
அசையாத மனமோ
இன்ப தேன் சொரியும்

நீ
நியாயமான இலக்குகளை
நியாயமாக தேடு
பேராசை வித்துக்களை
விவேகத்தால் சாடு

ஏனெனில்
ஆர்ப்பாட்ட அனுபவங்களை விட
அமைதி அளிக்கும் ஆனந்தம்
அதிகமானது!

என் பாட்டோடு பயணித்த
தோழனே,

பொறுப்பின்றி ஒடுங்குவது
புத்தியின் சுருக்கம்
வெறி கொண்டு திரிவது
துன்பத்தை பெருக்கும்

இருப்பதில் மகிழ்வது தான்
ஞானத்தின் துவக்கம்!

சுகங்களை அடைவது நிம்மதியா
நிம்மதியை அடைவது சுகமா

நீயே தேர்ந்தேடுத்துக்கொள் !!!

Thursday, February 14, 2008

காதல் எனது பார்வையில்....

காதலை எனது பார்வையில் கூற
நான் ஒன்றும் ஞானி அல்லவே

பின்பு ஏன் காதலை பற்றி
எனது பார்வையில் கூற வந்தேன்???


எனது இந்த சொற்கள் காதலை
விமர்சனம் செய்ய அல்ல!

காதல் என்ற ஒன்று என்னுள் எவ்வெவ்வாறு
உருமாறியதென்பதை கூறவே வந்தேன்!


என் பள்ளி வயதில்...

காதல் என்றால் வெறுப்பு
காதல் என்றால் பிரிவு
காதல் என்றால் பிரச்சனை

விவரமரியா அந்த பருவத்தில்
காதலை அனைவரும் காதலிக்கும் அப்பருவதில்

காதல் எனக்கு வெறுப்பாய் போனது !!!


கல்லூரி வயதில்...

காதல் என்றால் காமம்
காதல் என்றால் பைத்தியகாரத்தனம்
காதல் என்றால் சலிப்பு

உலகம் அறிய ஆசைப்படும் அந்த பருவத்தில்
அனைவரும் காதலின் காலடியை தேடும் அப்பருவத்தில்

காதல் என்பது எனக்கு சுமையாய் ஆனது !!!


அடுத்த நான்கு வருடத்தில்...

காதல் என்றால் வீண் வேலை
காதல் என்றால் பொழுது போக்கு
காதல் என்றால் விதண்டாவாதம்

உலகம் அறிந்த அந்த வயதில்

அனைவரும் காதலின் சுகம் காணும் அவ்வயதில்
காதல் என்பது எனக்கு வேடிக்கையாய் போனது !!!

இன்றோ...

காதலின் சுகம் புரிய முயற்சி செய்கிறேன்...
காதலின் கணம் கண்டு கலவரமடைகிறேன்...
காதலின் உண்மை அறிய அவா கொள்கிறேன்...

அன்று வேடிக்கை போன காதல்
அன்று சலிப்பை தோன்றிய காதல்
அன்று வெறுப்பாய் தோன்றிய காதல்

இன்று...???