வாழ்கையின் யதார்த்ததை
என்னை யோசிக்க வைத்த
என் ரசனைக்கு உரிய
ஓர் படைப்பு
உங்கள் முன்னால்...
நிம்மதியின் சந்நிதி
--------------------------
சோகத்தின் சொந்தக்காரனே
கவலைகளின் கைதியே
ஏமாற்றங்களின் விலாசமே
இடிந்துகிடக்கும் இதயமே
முனுமுனுப்புக்களில்
மூச்சை கரைத்தது போதும்
என் சிந்தனை தேரில் வந்தமர்
ஓர் ஞான யாத்திரை நடத்தி பார்போம் !
உன் உயிர்
உன்னை கேட்டு உண்டானதில்லை
உன் உடல்
உன் உடன்பாட்டோடு உருவானதில்லை
உன்
அழகோ அழகின்மையோ
ஏழ்மையோ செல்வமோ
எதுவாயினும்
அவை பிறப்பால் திணிக்கப்பட்ட
இயற்கை பிடிவாதங்கள் !
வாழ்க்கை என்பது
செலவளித்தே தீர்க்க வேண்டிய செல்வம்
நொடி நொடியாக
பிறப்பிலிருந்து இறப்பை நோக்கி நகரும் பயணம்
இதில்
எல்லாமுள்ளவனும்
ஏதுமில்லாதவனும்
என்றுமே இருந்ததில்லை !
சதுரங்கத்தின் கருப்பு வெள்ளையாய்
இன்ப துன்பம் விரவி கிடக்கும்
வாழ்க்கை களத்தில்,
நீ
ஆட்டக்காய் என்கிறது இறையுணர்வு
ஆட்டக்காரன் என்கிறது பகுத்தறிவு
இதுவோ அதுவோ
இங்கே
கேட்டதெல்லாம் கிடைப்பதில்லை
கிடைத்ததெல்லாம் கேட்டதில்லை !!!
மன்னிலுறை தாவர சங்கமத்தில்
மகத்துவம் அதிகம் பெற்ற மனிதனே
எதிர்பார்ப்பு காற்றில்
இலவமாய் பறந்து
ஏமாந்து கணங்களில்
இரும்பாகி போக
எது காரணம்?
மனம்
மனம்
மனம் !!!
இங்கே
மனமிருக்கும் வரை
நினைவிருக்கும்
நினைவிருக்கும் வரை
கனவிருக்கும்
கனவிருக்கும் வரை
துயரிருக்கும்.
இப்பொல்லா மனதை
ஒதுக்கி வைத்து ஓட முடியாது
உன் இயக்கம்
முற்று புள்ளியை எட்டி விடுமுன்
உன் மயக்கம்
மறைந்து போக வேண்டாமா?
சஞ்சலிக்கும் மன பேயை
தேவனாக்கும் சாதனையே
சத்திய தரிசனம்
புறத்தே பார்த்து பார்த்து புலம்புகின்றவனே
நீ
அகத்தை பார்க்க ஆரம்பித்துவிடு !
சட்டையில்லா உடம்பின் மேல்
சாட்டையால் அடித்து கொண்டு
பிச்சை கேட்பவர் போல்
ஆசை என்னும் சாட்டையால்
ஆன்மாவை வதைத்து கொள்ளும்
அவலத்தை கொல்.
உள்ளத்தை களைத்த ஒருத்தி
உடன்பட்டு விட்டால்
இன்னொன்று ஈர்க்காமல் விட்டுவிடுமா?
கூடை கூடையாய்
ஆடைகள் குவிந்தாலும்
போதும் என்ற நிறைவு பூத்துவிடுமா?
வகை வகையாய்
வடித்து தின்றாலும்
சுவையுணர்ச்சி சுருங்கி போகுமா?
வீடு கிடைத்தால் ஊரின் மேலும்
ஊர் அமைந்தால் நகரின் மேலும்
நகர் எய்தினால் நாட்டின் மேலும்
பெருகி கொண்டே போகும்
ஆசைக்கு அளவென்பதில்லை!
தாய் பூச்சியை கொல்லும் வரை
கரையான் புற்று மறையாது
ஆசை பூச்சியை கொல்லும் வரை
சோக சுமைகள் குறையாது!
உடம்பை களைப்பாற்ற
உறங்குகின்ற மனிதனே
மனதை இளைப்பாற்ற
மறந்து விட்டதேன்?
பசுமையும் வரட்சியும்
மழையை சார்ந்தது
இன்பமும் துன்பமும்
மனதை சார்ந்தது!
அலைகின்ற மனது
தீப்புன்னாய் எரியும்
அசையாத மனமோ
இன்ப தேன் சொரியும்
நீ
நியாயமான இலக்குகளை
நியாயமாக தேடு
பேராசை வித்துக்களை
விவேகத்தால் சாடு
ஏனெனில்
ஆர்ப்பாட்ட அனுபவங்களை விட
அமைதி அளிக்கும் ஆனந்தம்
அதிகமானது!
என் பாட்டோடு பயணித்த
தோழனே,
பொறுப்பின்றி ஒடுங்குவது
புத்தியின் சுருக்கம்
வெறி கொண்டு திரிவது
துன்பத்தை பெருக்கும்
இருப்பதில் மகிழ்வது தான்
ஞானத்தின் துவக்கம்!
சுகங்களை அடைவது நிம்மதியா
நிம்மதியை அடைவது சுகமா
நீயே தேர்ந்தேடுத்துக்கொள் !!!
8 comments:
vazhkayin yetharthathai unmayai solgira kavithai.
ithu yarudaya padaippu enru therindu kolla arvam
Very Nice
P.Chelin Rupan
உள்ளத்தை களைத்த ஒருத்தி
உடன்பட்டு விட்டால்
இன்னொன்று ஈர்க்காமல் விட்டுவிடுமா?
கூடை கூடையாய்
ஆடைகள் குவிந்தாலும்
போதும் என்ற நிறைவு பூத்துவிடுமா?
வகை வகையாய்
வடித்து தின்றாலும்
சுவையுணர்ச்சி சுருங்கி போகுமா?
Good one.....
கவிதை குட்டி போடுமா?
போடும் - பூர்ணிமா.
interesting read ! :)
I am still searching for the author. No clue yet.
Awesome
Post a Comment