Saturday, July 31, 2010

பெண்ணே

உன் மனம் பேசா வார்த்தைகளை
உன் மௌனம் உணர்த்தியது!

உனக்கும் எனக்குமான இடைவெளி
இனி எப்போதும் எல்லைக்குள்!

சபதமாய் நான் ஏற்கிறேன்
உன் கோப கனல்களை குளுமை
படுத்திவிடு என் பெண்ணே!!!

தனிமை

தனிமை...
அர்த்தம் புரிதலில் தவறுள்ளதோ?
தனிமை என்பது
                 தனித்து நிற்பதல்ல!
தனக்கு தானே துணையாகக் கொண்டு
தன்னை தானே நட்பு பாராட்டி
தனக்கு தானே உயிர்ப்பித்துக் கொள்ளும்
தன்னை தானே உய்வித்துக் கொள்ளும்
ஓர் உன்னத அனுபவம்!

தனக்கான தன்னாலான துணை
                              வெறுமையல்ல
இனிமை அது என்றென்றும்!!!

நிசப்தம்

மனம் பேசும் வார்த்தைகள்
எதிர் சுவற்றில் எதிரொலிக்கிறது!
கண் விழித்திருக்கும் போதும்
கற்பனைகள் கண் முன்னே ஓடி ஆடுகிறது!
தொலை தூர காலடி ஓசை
துல்லியமாய் காதில் விழுகிறது!

நிசப்தம்
எங்கும் நிசப்தம்!!!

நித்திரையும்... கனவுகளும்...

மறைவுகள் இன்றி வாழ்ந்த வாழ்க்கையில்
இன்று மறைவுகளே வாழ்க்கையாய்...
உண்மையின் நேர்காணல் எப்போது நேரும்?

கனவுகளில் வாழ்க்கை சந்தோஷங்களை கண்டு
கனவுகள் கலைந்தால்
விழித்துக் கொண்டதாய் அர்த்தம் கொண்டேன்
விடியல் கண்டதாய் அர்த்தம் கொண்டேன்

வாழ்க்கை என்னும் நிஜத்தில் பிரயாணப் படுவதாய்
                                                             பூரித்துப் போனேன்

நிஜத்தின் நிழலைக் கண்டே என் எதிர்கால நிகழ்வுகள்
                                         புரிந்ததாய் புரிந்து கொண்டேன்

நிஜத்தின் நிஜத்தைக் கண்ட பின்பே
கனவுகளின் உண்மை புரிந்தேன்

இன்றோ...
கனவுகளுக்கு ஏங்கி கண்களை கோர்க்கிறேன்

நித்திரையும் இல்லை
கனவுகளும் இல்லை!!!

Thursday, July 29, 2010

என் நண்பனின் சில வரிகள்...

நண்பா நீ கேட்டுக் கொண்டாய் என இதோ ஒரு சுய விளம்பரம் :)

பூர்ணி , இவள்
 
தனிமை விரும்பி
 
கேள்வியின் நாயகி
 
கனவுகளின் தோழி 
 
கற்பனையின் காதலி  
 
குமரியின் வடிவம்
 
குழந்தையின் உள்ளம்
 
அறிவில் கலைமகள் அம்சம்
 
கோபத்தில் காளியின் வம்சம்
 
ஆருயிர் தோழியாக  அன்னை
 
தங்கையின் உருவில் இன்னொரு அன்னை
 
உள்ளுக்குள் கண்ணீர் வடிப்பாள்
 
வெளியில் பொய்யாக சிரிப்பாள்
 
இது இவளுக்கு கை தேர்ந்த கலை 
 
யாரிடம் கற்றாள் இதை 
 
பெண்ணே இதுவும் ஒரு நாள் கடந்து போகும்
 
உன் வாழ்வில் மீண்டும் வசந்தம் வரும்
 
இப்படிக்கு,
 
 நீ வாழ வாழ்த்தும் ஓர் இதயம்

Friday, July 23, 2010

என்னை என்னுள்ளே செதுக்கியவர்கள்

என் கற்பனைக்கு தீனி போட்டவர்கள் 
என்னை என்னுளே அடையாளம் கண்டவர்கள்
என் நன்றி கடனாய்

என் மலரும் நினைவுகளாய்
இதோ உங்கள் முன் என் வரிகள்!

அப்பா
திருட்டுத்தனமாய் உங்கள் கவிதைகளை நேசித்திருகிறேன்
உங்கள் கனவுகளில் குடிபுகுந்துள்ளேன்
உங்கள் சிந்தனை சிறகுகளில் சிறிது இடம் எடுத்துக் கொண்டேன்!

என்னுடைய முதல் உந்துதல் தாம் தான்! 

உலகில் அவரவர்க்கு கவி எழுத தூண்டுதலாய்
ஆயிரமாயிரம் கவிஞர் இருப்பர்
எனக்கோ
எனக்கு இந்த உலகை அடையாளம் காட்டியவர்
என்னை எனக்கே அடையாளம் காட்டினார்!!!

உங்களை பற்றி அனைத்தும் அறிந்த நான்
நீங்கள் எழுத நிறுத்தியதன் காரணம் மட்டும் ஏனோ அறியேன்!

உமக்கே தெரியாமல் உம்மை என் ஆசானாய் ஏற்றுக் கொண்டேன்
உலகமறியா அவ்வயதில் புவியனைத்தும் தெரிந்து கொள்ள
என் முதல் திறவுகோல் உங்கள் கவிதை என்னும்
கிறுக்கல்கள் தான்!

கிறுக்கல்கள்...
இது சரியான வார்த்தையல்ல
அது
உனது வாழ்க்கை பிரயாணங்கள்!

நீர் வாழ்ந்த இளமை காலங்கள்
உமக்கு நினைவுள்ளதா நான் அறியேன்

நீர் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும்
நானும் வாழ பழகிக் கொண்டேன்
உமது கவிச் சிறகுகளில் பிரயாணப் பட்டு 
உமது வரிகளால் நானும் வானுலகில் மிதக்க கற்றுக் கொண்டேன்! 

உமக்கான ஒவ்வொரு ஆசையையும்
உமக்கான ஒவ்வொரு கனவையும்
எனதாக்கி கொண்டேன்!

உமது முடிவுற்ற எழுத்துக்களின் ஆரம்பமாய்
என்னை நினைத்து எழுதக் கற்றுக் கொண்டேன்!

நீர் முடிந்ததாய் என்னும் எழுத்துக்கள்
முடியாமல் என் மூலம் வலம் வந்து கொண்டிருக்கும்!!!
என் எழுத்துகளின் முடிவு
என் சந்ததியின் எழுத்துக்களின் ஆரம்பமாய் திகழும்!!! 

தோழா (2)

தாய்மை பெண்ணுக்கு சொந்தம் 
ஆயினும்
தாயாய் என்னை அரவனைக்கிறாய்!

உன் குரலின் இனிமையில் 
உலகையும் வென்றிடும் தெம்புண்டு எனக்கு
உன் வார்த்தையின் வெப்பத்தில்
கொடூரங்களை எதிர்கொள்ளும் துணிவுண்டு!

என்னுள் நேசமாய், நட்பாய் துளிர்விட்ட நீ
என்னுள் முழுமையாய்
உணர ஆரம்பிக்கும் முன் பிரிந்து செல்வாயோ???

தோழா

என் வாழ்க்கை நீ வாழ பழகி கொண்டாய்
உன் நடைமுறை நான் தெரிய விளக்கி சொன்னாய்

உன் அறிமுகத்தால்...
உன்னை நேசித்தேனா அறியவில்லை
என்னை நேசிக்க கற்றுக் கொண்டேன்!

என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
என்னை யாரென்று எனக்கே சொல்லி கொடுத்தாய்!
என்னிடம் நீ பேசிய தருணங்களை விட
எனக்காய் நீ வாதாடிய தருணங்கள் ஏராளம்!

நம் நட்பு 
முதலுமில்லாமல் முடிவுமில்லாமல் ...

உள்ளங்கள் புரிந்து கொள்ளும் இவ்வுறவிற்கு
உள் அர்த்தம் தேவையில்லை!

காலம் பாராமல் நாம் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகள்
நேரமரியாமல் நாம் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள்
ஓர் வாழ்க்கை பருவத்தில் அடங்கி விடாது!!!